சூர்யா ப‌திவுக‌ள்

பில்லூர் – ஒரு த்ரில் ப‌ய‌ண‌ம்

Posted by சூர்யா மேல் ஜனவரி 4, 2009

க‌ல்லூரியில் ப‌டித்துக் கொண்டிருந்த‌ ச‌ம‌ய‌ம் ப‌ல‌ முறை பில்லூர் செல்ல‌ வாய்ப்பு கிடைத்த‌து. அங்கு எனது உற‌வின‌ர் பாபு* த‌மிழ்நாடு குடிநீர் வ‌டிகால் வாரிய‌த்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அவ‌ர் அங்கிருந்த‌தால் அடிக்க‌டி அங்கு போகும் வாய்ப்பு எங்க‌ளுக்கு கிடைத்த‌து. அப்ப‌டி ஒரு முறை செல்லும்போது ஏற்ப‌ட்ட‌ அனுப‌வ‌த்தை உங்க‌ளிட‌ம் ப‌கிர்ந்து கொள்கிறேன்.

அப்பொழுதெல்லாம் க‌ல்லூரி விடுமுறை என்றால் என்னுட‌ன் என் ந‌ண்ப‌ர்க‌ள் அசோக்* ம‌ற்றும் ல‌க்ஷ்ம‌ண‌ன்* சேர்ந்து கொள்வார்க‌ள். இதில் அசோக் வ‌ணிக‌ வ‌ரி துறையில் ப‌ணி புரிந்து கொண்டு இருந்தான், சிரு வ‌ய‌திலிருந்தே என் நெருக்க‌மான ந‌ண்ப‌ர்க‌ளில் ஒருவ‌ன். அப்ப‌டித் தான் ஒரு நாள் திடீரென்று நாங்க‌ள் ஒன்று சேர‌, என் த‌ம்பி ச‌ர‌வ‌ண‌னும்* கோய‌ம்ப‌த்தூரிலிருந்து வ‌ந்திருந்தான். அசோக்கிட‌ம் நானும் ச‌ர‌வ‌ண‌னும் பில்லூரைப் பற்றி முன்பே சொல்லியிருந்த‌தால் அவ‌ன் நாம் இரண்டு நாட்க‌ள் பில்லூர் போய்வ‌ர‌லாம் என‌ ஆர‌ம்பிக்க‌ கூட‌ ல‌க்ஷ்ம‌ண‌னும் சேர்ந்து சென்று வ‌ர‌லாம் என‌ சொல்ல‌ ச‌ரி என்று கிள‌ம்ப முடிவெடுத்தோம்.

நாங்க‌ள் ஈரோட்டில் இருந்து கிள‌ம்பும் போதே மாலை 5 ம‌ணிக்கு மேல் ஆகி விட்ட‌தால் சற்று த‌ய‌க்க‌மாக‌ இருந்த‌து ஏனென்றால் கார‌ம‌டை எனும் இட‌த்தில் இருந்து காட்டுக்குள் 40 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் செல்ல‌ வேண்டும் என்ப‌தே அந்த‌ த‌ய‌க்க‌த்துக்கு கார‌ணம்.  அசோக்  ச‌ற்றும் யோசிக்காம‌ல் கிள‌ம்புவோம் என‌ வ‌ற்புருத்த‌ ஒரு ம‌ன‌தாக‌ கிள‌ம்பினோம். அசோக் எங்க‌ளுட‌ன் பில்லூர் வ‌ருவ‌து அதுவே முத‌ல் முறை ஆனால் நான் ம‌ற்றும் என்னுட‌ன் வ‌ந்த‌ உற‌வின‌ர் ச‌ர‌வ‌ண‌ன் முன்பு சென்ற‌ அனுப‌வ‌த்தில் சற்று நேர‌மாகி விட்ட‌தால் யோசித்தோம்.

பில்லூர் செல்லும் ம‌லைப்பாதை மிக‌வும் அட‌ர்ந்த‌ காடுக‌ள் நிறைந்த‌ ப‌குதி ம‌ற்றும் யானைக‌ள் அதிக‌ம் உள்ள‌ இட‌ம் என்ப‌தால் தான் அந்த‌ ப‌ய‌ம். நாங்க‌ள் சொல்வ‌தை கேட்கும் நிலையில் அசோக் இல்லை ஏனென்றால் அவ‌னுக்கு அடுத்த‌ இர‌ண்டு நாட்க‌ளும் விடுமுறை. அவ‌னுட‌ன் அவ‌ன் ந‌ண்ப‌ன் ம‌கேஷும்* சேர்ந்து கொண்டு நானும் வ‌ருகிறேன் புற‌ப்ப‌ட‌லாம் என்று சொல்ல‌ நானும் ச‌ர‌வ‌ணனும் ச‌ரி நாம் தான் ஐந்து பேர் உள்ளோமே என்ற‌ தைரிய‌த்தில் அசோக்கின் காரையே ஒருவ‌ழியாக‌ எடுத்துக் கொண்டு கிள‌ம்பினோம்.

நாங்க‌ள் கார‌ம‌டை சென்ற‌டையும்போதே ம‌ணி 8.40 ஆகி விட்ட‌து, இன்னும் சுமார் 40 கிலோ மீட்ட‌ர் செல்ல‌ வேண்டும் அதுவும் அட‌ர்ந்த‌ காட்டுக்குள், நினைத்துப் பார்க்க‌வே ச‌ற்று ப‌ய‌மாக‌த் தான் இருந்த‌து. ச‌ரி இத்த‌னை பேர் உள்ளோமே என்ற‌ தைரிய‌த்தில் கார‌ம‌டையில் தேவையான‌ பொருட்க‌ளை வாங்கிவிட்டு காரை கிள‌ப்பினோம். பில்லூரில் பாபு டேமிலிருந்து இர‌ண்டு கிலோ மீட்ட‌ர் தொலைவில் வாட்ட‌ர் போர்ட் குவார்ட்ட‌ர்சில் த‌ங்கி இருந்த‌தால் அங்கு எதுவும் கிடைக்காது. கார‌ம‌டையில் இருந்து தான் எதுவென்றாலும் வாங்கி செல்ல‌ வேன்டும். ம‌கேஷ் கார‌ம‌டையிலிருந்து காரை கிள‌ப்பி 10 அல்ல‌து 15 கிலோ மீட்ட‌ர் தாண்டிய‌துமே என் முக‌த்தைப் பார்த்தான். அசோக்கும் ல‌க்ஷ்ம‌ண‌னும் போகும் பாதையை க‌வ‌னிக்காம‌ல் ஏதோ ச‌ண்டை போட்டுக் கொன்டிருந்த‌ன‌ர்.

நானும் ச‌ர‌வணனும் போகும் பாதையையே உற்று க‌வ‌னித்துக் கொண்டிருந்தோம், ஏனென்றால் கார‌ம‌டையிலிருந்து குந்தா ரோட்டில் ச‌ரியாக‌ 25 கிலொ மீட்ட‌ரில் வ‌ல‌து பக்க‌ம் திரும்ப‌ வேண்டும் என்ப‌தே. ம‌கேஷ் ரோட்டில் உடும்பு க‌ட‌ந்த‌துமே ச‌ற்று ப‌ய‌த்துட‌ன் நீங்க‌ள் யாராவ‌து காரை ஓட்டுங்க‌ள் என‌ ஆர‌ம்பித்தான். ஏன் அந்த‌ ப‌ய‌ம் என்றால் கார‌ம‌டையிலிருந்து 20 கிலோ மீட்ட‌ர் தாண்டியும் எந்த‌ வாக‌ன‌த்தையும் நாங்க‌ள் பார்க்க‌வில்லை என்பதே. நான் ம‌கேஷை நீயே ஓட்டு இங்கு வ‌ண்டியை நிறுத்த‌ வேண்டாம் என்று சொல்லி முடிக்கையில் கேர‌ளா செக் போஸ்ட் போர்ட் தெரிந்த‌து. நாங்க‌ள் ம‌கேஷை வ‌ல‌து ப‌க்க‌ ரோட்டில் திருப்ப‌ சொல்லி சிரிது தூர‌த்தில் வாட்ட‌ர் போர்ட் க்கான த‌னியார் பாதையில் வண்டியை விட‌ சொன்னோம்.

பாதையின் ஆர‌ம்ப‌த்தில் செக் போஸ்ட் தெரிந்த‌து, எங்கே இந்த‌ நேர‌த்தில் இவ்வ‌ழியாக‌ செல்கிறீர்க‌ள் என‌ கேட்க‌ நானும் ச‌ர‌வ‌ண‌னும் கீழே இர‌ங்கி அவ‌ர்க‌ளுக்கு பாபுவின் உற‌வின‌ர் என்று சொன்ன‌தும், அது ச‌ரி இந்த‌ நேர‌த்தில் இந்த‌ காட்டுப் பாதையில் எப்ப‌டி செல்வீர்க‌ள் என்ற‌தும் நாங்க‌ள் பார்த்துக்கொள்கிறோம் சார் என்று வீராப்பாக‌ சொல்ல‌ அவ‌ர் போகும் போது வ‌ழியில் வ‌ண்டியை எங்கும் நிறுத்த‌ வேண்டாம் என்றும் காரின் டேப் ரெக்கார்ட‌ரை உப‌யோகிக்க‌ வேண்டாம் என்றும் சொல்லி அனுப்பி வைத்தார்.

செக் போஸ்ட்டில் இருந்து கிள‌ம்பிய‌துமே பாதை குருகி சிங்கிள் ரோடாகிய‌து ம‌கேஷுக்கு இன்னும் ப‌ய‌ம் அதிக‌ரித்த‌து, ஏனென்றால் வ‌ண்டியை எங்கும் திருப்ப‌ முடியாது. அந்த‌ப் பாதையில் வாட்ட‌ர் போர்ட் ஸ்கூல் வேன் ம‌ட்டுமே சென்று வ‌ரும், பாபுவுட‌ன் ப‌ணி புரிப‌வ‌ர்க‌ளின் குழ‌ந்தைக‌ளை கார‌ம‌டைக்கு அருகில் இருக்கும் ஸ்கூலுக்கு கூட்டி சென்று வ‌ரும் வேறு எந்த‌ வாக‌ன‌மும் அதை உபயோகிக்க‌ முடியாது ஏனென்றால் இப்பாதை டேமிற்கு பின்புற‌ம் உள்ள‌ இவ‌ர்க‌ள் குவார்ட்ட‌ர்சிற்கு சென்று வ‌ர‌ ம‌ட்டும் தான். ரோட்டின் இருபுற‌மும் அட‌ர்ந்த‌ ம‌ர‌ங்க‌ளும் செடி கொடிக‌ளும் தான் தெரிந்த‌து, காட்டு வ‌ண்டுக‌ளின் ச‌த்த‌ம் தான் ப‌ய‌முருத்துவ‌து போல் இருந்த‌து.

ஒரு வ‌ழியாக‌ நான்கு கிலோ மீட்ட‌ர் க‌ட‌ந்து இருப்போம், ஒரு வ‌ளைவில் திடீரென்று காரை நிறுத்திய‌தும் அனைவ‌ரும் ப‌ய‌ந்தே போய்விட்டோம். ம‌கேஷ் க‌த்தியே விட்டான் ஏனென்றால் ரோட்டில் யானையின் ல‌த்தி அதில் ஆவி வேறு பற‌ந்து கொண்டிருந்த‌து. அப்பொழுது தான் யானை அந்த‌ வ‌ழியாக‌ க‌ட‌ந்து சென்றிருக்க‌க்கூடும். ஒரு வ‌ழியாக‌ ம‌கேஷுக்கு தைரிய‌ம் கொடுத்து காரைக் கிளப்பினோம். அது வ‌ரை அசோக்கும் ல‌க்ஷ்ம‌ண‌னும் ச‌ண்டை போட்டு வ‌ந்த‌வ‌ர்க‌ள் நான் திரும்பிப் பார்த்த‌போது ஒருவ‌ரையொருவ‌ர் முக‌த்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்க‌ள். காரின் பின் க‌த‌வு க‌ண்ணாடிக‌ள் ஏற்றப்ப‌ட்டிருந்த‌து.

அப்பொழுது தான் நாங்க‌ள் கிள‌ம்பும் போதே யோசித்த‌து அவ‌ர்க‌ளுக்கு உறைக்க‌ ஆர‌ம்பித்த‌து. ம‌கேஷ் ஒரு இட‌த்தில் காரை நிறுத்தி இந்த‌ இட‌த்தில் ரோடு கொஞ்ச‌ம் அக‌ல‌மாக‌ இருக்குது இங்கேயே திருப்பி வ‌ந்த‌ வ‌ழியாக‌வே திரும்பி போய்விட‌லாம் என்ற‌தும் அனைவ‌ரும் ஒருவ‌ர் முக‌த்தை ஒருவ‌ர் பார்த்து யோசித்தோம். அதில் ச‌ர‌வ‌ண‌ன் அண்ணா இன்னும் கொஞ்ச‌ தூர‌ம் தான், அடுத்து இன்னும் இர‌ண்டு கிலோ மீட்ட‌ர்ல‌ குவார்ட்ட‌ர்ஸ் கேட் வந்திடும் என‌ சொல்ல‌ நாங்க‌ள் ம‌கேஷை உசுப்பி தைரிய‌ம் சொல்லி கிள‌ம்பினோம்.

காரில் ஒரே மெள‌ன‌ம் தான், யாரும் பேசிக்கொள்ள‌வில்லை. அனைவ‌ரும் ரோட்டையே வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தோம். ம‌கேஷ் கோப‌த்தில் க‌த்திக்கொண்டே வ‌ந்தான், ஏனென்றால் ச‌ர‌வ‌ணன் சொன்ன‌து போல் இர‌ண்டு கிலோ மீட்ட‌ர் தாண்டியும் இன்னும் இட‌ம் வ‌ர‌வில்லை என்ப‌தே. என‌க்கும் ச‌ர‌வ‌ண‌னுக்கும் தான் தெரியும் இர‌ண்டு கி.மீ இல்லை இன்னும் பத்து கி.மீட்ட‌ராவ‌து செல்ல‌ வேண்டும் என்று.

ஒரு இட‌த்தில் நாங்க‌ள் போன‌ பாதை அத்துட‌ன் முடிந்து ஏதொ ஒரு சிரிய‌ ம‌ண் ரோடு பிரிந்த‌து, காரை நிறுத்தி சுற்றும் முற்றும் பார்த்தால் அது காட்டுக்குள் ஆட்க‌ள் ந‌ட‌ந்து செல்ல‌ உப‌யோகிக்கும் பாதை என்ப‌து புரிந்த‌து. பின் தான் புரிந்த‌து நாங்க‌ள் கேட்டைத் தாண்டி வ‌ந்து விட்டோம் என்று. ச‌ரி வேறு வ‌ழியில்லை வ‌ண்டியை ரிவேர்ஸ் தான் எடுத்தாக‌ வேண்டும் என்றால் பின்னால் என்ன‌ இருக்கிற‌து என்ப‌தே தெரிய‌வில்லை. ரிவேர்ஸ் லைட் இல்லையாடா அசோக்கு என்ற‌தும் அவ‌னுக்கு மூக்கிற்கு மேல் கோப‌ம் வ‌ந்த‌து, ஏன்டா கேட்க‌ மாட்டீங்க‌ன்னு ச‌த்த‌ம் போடும் போதே நானும் ம‌கேஷும் அந்த‌ காட்டுப் பாதையில் திருப்பி விட‌லாம் என‌ முடிவெடுத்தோம்.

சிறு சிர‌ம‌ங்க‌ளுக்குப் பிற‌கு ஒரு வ‌ழியாக‌ வ‌ண்டியைத் திருப்பினோம், திருப்பிய‌தும் ம‌கேஷ் எப்ப‌டிடா என்றான், டேய் போதும், இனியாவ‌து ரோட்ட‌ பார்த்துப் போ என்று சொன்ன‌தும் அவ‌ன் ச‌ர‌வ‌ண‌னையும் என்னையும் திட்ட‌ ஆர‌ம்பிக்கும்போதே, TWAD போர்ட் தெரிந்த‌து, அப்பாடா என்று அனைவ‌ரும் பெருமூச்சு விட்டோம், ஹார‌னை அழுத்தி பாபுவிற்காக‌ காத்திருந்தோம். பாபுவுட‌ன் வ‌ந்தவ‌ர்க‌ள் எப்ப‌டி இந்த‌ நேர‌த்தில் தைரிய‌மாக‌ இந்த‌ காட்டிற்குள் வ‌ந்தீர்க‌ள் என‌ ஆச்ச‌ர்ய‌ம் க‌ல‌ந்த‌ ப‌ய‌த்தோடு வ‌ர‌வேற்றார்க‌ள்.

நான் எத்த‌னையோ இட‌ங்க‌ளுக்கு போயிருக்கிறேன் ஆனால் அவை எதுவுமே பில்லூர் அள‌வு என் ம‌ன‌தில் நிற்க‌ மறுக்கிற‌து என்றே சொல்ல‌லாம். நாங்க‌ள் இருந்த‌ இட‌ம் சுற்றிலும் அட‌ர்ந்த‌ காடு ந‌டுவில் டேம் ம‌ற்றும் TWAD குவார்ட்ட‌ர்ஸ் த‌னியாக‌ ஒரு ஒதுக்குப்புறத்தில் ம‌லைக்கு ந‌டுவே இருந்த‌து. நாங்க‌ள் இர‌ண்டு நாட்க‌ள் க‌ழித்து எங்க‌ளுக்கு கிள‌ம்ப‌வே ம‌ன‌ம் இல்லை, மீண்டும் ஒரு நாள் இருந்து விட்டுத்தான் வ‌ந்தோம்.

இப்பொழுது நாங்க‌ள் ஒருவ‌ரையொருவ‌ர் ச‌ந்தித்துக் கொண்டாலும் பில்லூர் அனுப‌வ‌ம் ப‌ற்றி பேசாம‌ல் இருந்த‌தில்லை. என் வாழ்க்கையில் என்றுமே ம‌ற‌க்க‌ முடியாத‌ ப‌ய‌ண‌ம் அது.

* பெய‌ர்க‌ள் மாற்ற‌ப்ப‌ட்டுள்ள‌து.

7 பதில்கள் to “பில்லூர் – ஒரு த்ரில் ப‌ய‌ண‌ம்”

  1. Madhavan said

    Great experience. Great Presentation. Keep it up

  2. Anandan said

    நிஜமாவே அன்னைக்கு எல்லோரும் “தெளிவா” இருந்தீங்களா ? யானை உங்களை எல்லாம் பார்த்து இருந்தா, யானைக்கு அது ரொம்ப நல்ல experience ஆ இருந்து இருக்கும்… ஹா ஹா ஹா.

    இந்தக் கதைய நீ எங்க எல்லோருக்கும் சொல்லவே இல்லையே ராஜா…. இந்த மாதிரி incidence எல்லாம் நம்ம saturday night பேசுனா நல்லா இருந்து இருக்கும்…

    சரி, திரும்பி வரும்போதாவது டே-டைம் ல வந்தீங்களா ???

  3. ச‌ர‌வ‌ணன் said

    அனுபவம் பற்றி அழகாக எழுதி உள்ளீர்கள். இப்பவும் யானையைப் பார்த்தால் பில்லூர் ஞாபகம் நினைவுக்கு வரும். மீனைப் பார்த்தாலும் பில்லூர் ஞாபகம் நினைவுக்கு வரும். க‌ல்லூரி வாழ்க்கை ம‌றுபடியும் இருந்தால் நன்றாக இருக்கும்.

  4. Meena said

    great experience. Idhanal than babu seekkiram transfer vaankittu oodi vanduttaanaa?

  5. க‌ண்டிப்பாக‌ப் பேச‌லாம் நான் ரெடி. நீ ரெடியா?

    திரும்பி வ‌ரும்போது ரொம்ப‌ அச‌தியா இருந்துச்சு.. அத‌னால‌ ரிஸ்க் எடுக்க‌ விரும்ப‌ல‌.. சாய‌ந்த‌ர‌ம் 6 ம‌ணிக்கெல்லாம் கோய‌ம்ப‌த்தூரே வ‌ந்து சேந்துட்டோம் ராஜ்…

  6. Nava said

    A good sharing… nice to read.. few more please..

  7. Mithun said

    Super
    keep on writing more like this…

பின்னூட்டமொன்றை இடுக