சூர்யா ப‌திவுக‌ள்

Posts Tagged ‘எம்.எஸ்.பாஸ்கர்’

அஞ்சாதே விமர்சனம்

Posted by சூர்யா மேல் மார்ச் 21, 2008

கமர்சியல் மசாலா படங்களுக்கு மத்தியில் மீண்டும் ஒரு அருமையான விறுவிறுப்பான திரைப்படம். இயக்குனர் மிஷ்கின் இந்த படத்தில் ஒவ்வொருவரையும் கையாண்ட விதம் அற்புதம். பிரசன்னாவிற்கு கொடுத்து இருக்கும் வில்லன் பாத்திரத்தை அவருடைய வித்தியாசமான நடிப்பின் மூலம் அருமையாக நிறைவு செய்திருக்கிறார்.

 

காவல் நிலைய குடியிருப்பில் வசிக்கும் இரு நண்பர்களின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களை மிக நேர்த்தியாக காட்டி இருக்கும் படம் தான் அஞ்சாதே. நரேனும் அஜ்மல்அமிரும் நெருங்கிய நண்பர்கள், இருவரின் தந்தையும் போலிஸ் கான்ஸ்டபிள்கள். பொறுப்பில்லாமல் சுற்றித் திரியும் நரேனுக்கு சப்-இன்ஸ்பெக்டர் வேலை கிடைத்ததும், தன் கனவே போலீஸ் வேலை தான் என்று முழு மூச்சாக இருந்தும் தனக்கு வேலை கிடைக்காமல் போனது அஜ்மலுக்கு கோபத்தை வரவழைக்கிறது. இதனால் நரேனை அறவே வெறுக்க ஆரம்பிப்பதுடன், குடிப்பழக்கத்துக்கும் அடிமை ஆகி பிரசன்னாவின் கூட்டத்தில் சேர்ந்து விடுகிறார்.

 

பிரசன்னா இளம் பெண்களை கடத்தி கற்பழித்து பணம் பறிக்கும் வில்லனாக இந்தப்படத்தில் வருகிறார். இவரின் முடி நீளமாக வைத்திருந்ததாலோ என்னவோ இவரின் முகப்பரிமானங்களைப் பார்க்க முடியாமல் போகிறது. பாண்டியராஜன் “லோகு” கேரக்டரில் வில்லனாக வந்து கலக்கி இருக்கிறார். முக்கியமாக “கத்தாழை கண்ணால குத்தாத நீ என்ன….” பாட்டில் அவரின் அட்டகாசமான டான்ஸ் மூவ்மெண்ட் ரசிக்கும்படியாக இருக்கிறது.

 

கடைசியில் பிரசன்னா கூட்டத்தை பிடிக்கும் பொன்வண்ணன் டீமில் நரேனும் சேர்கிறார், இதிலிருந்து படம் படு விறுவிறுப்பாக போகிறது. படம் மிக நீளமாக இருந்த போதும் நேர்த்தியான திரைக்கதையால் மூன்று மணி நேரத்திற்கு மேல் ஓடுவது ஒன்றும் பெரிய இலுவையாகத் தெரியவில்லை.

 

மற்றபடி பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர் என அனைவரும் அவர்களுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பின்னணி இசை அருமையாக போட்டிருக்கிறார் சுந்தர் சி. பாபு. பாட்டுக்களில் வரும் நடன அசைவுகள் “சித்திரம் பேசுதடி – வாழ மீனுவை” ஞாபகப்படுத்துகின்றன. மிஷ்கின் ஒரு நல்ல பாடகர் என “அச்சம் தவிர்…” மற்றும் “கண்ணதாசன் காரைக்குடி…” பாட்டுக்கள் மூலம் நிரூபித்து இருக்கிறார்.

 

மொத்தத்தில் இந்தப்படம் நரேன் மற்றும் மிஷ்கினுக்கு நல்ல பெயரை வாங்கித்தரும் என்பதில் சந்தேகமே இல்லை. இப்படத்தை தொய்வில்லாமல் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இயக்கிய மிஷ்கினுக்கு நமது வாழ்த்துக்கள்!

 

Posted in சினிமா, விமர்சனம் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | 4 Comments »